கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்: காரணம் என்ன?



 டிட்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மழைப் பொழிவு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோமீட்டர் தூரத்திற்கு மாசு ஏற்பட்டுள்ளது என்று கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) அறிவித்துள்ளது.

இதனால் கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கற்பிட்டி மற்றும் கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நிலவிய கடும் மழையினால் ஏற்பட்ட மண் சரிவுகளிலிருந்து மற்றும் வீடுகளிலிருந்து அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் வழியாக இறுதியில் இலங்கைக் கடற் பகுதியை அடைந்துள்ளன.

இது தவிர, பருவப் பெயர்ச்சி மழைச் சூழல் காரணமாக இந்தியக் கடல் பகுதியில் காணப்பட்ட குப்பைகளும் நாட்டின் கரையோரப் பகுதியை வந்தடைந்துள்ளமை கண்காணிப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கூலி அடிப்படையில் தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகவும், இதற்குக் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் தேவைப்படும் என நம்புவதாகவும் MEPA தெரிவித்துள்ளது.

இந்தக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களைச் சேகரித்த பிறகு, அவற்றை மீள் சுழற்சிக்கு (Recycling) உட்படுத்துவதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாடு முழுவதும் அமைந்துள்ள MEPA-இன் 13 பிராந்திய அலுவலகங்களின் உதவிகளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியது பழையவை