ஆர்ட்டிக் கடல் பகுதியில் வாழும் திமிங்கிலங்களின் உடல்நிலையை ஆய்வு செய்வதற்காக, ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் அவற்றின் சுவாசத்துடன் வெளியேறும் காற்று மற்றும் நீர்த்துளிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வு முறையின் மூலம் திமிங்கிலங்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
திமிங்கிலங்கள் கடல் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிக்கும் போது, அவற்றின் சுவாசத் துளைகள் (Blowholes) வழியாக வெளிவரும் நீர்த்துளிகளைப் பிடிக்க, சிறப்பு வடிவமைப்புடன் கூடிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வை லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் நோர்வே நார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
ஆய்வின் முடிவில், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்கள் குழுக்களாக கரை ஒதுங்குவதற்கு காரணமாகக் கருதப்படும், மிக வேகமாக பரவும் ‘செட்டேசியன் மோர்பில்லி வைரஸ்’ (Cetacean Morbillivirus) ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பரவி வருவது முதன்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் கடலில் வாழும் பாலூட்டிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடல்வாழ் உயிரினங்களில் நோய்கள் பரவுவதற்கு முன்பே அவற்றை கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.