தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 12வது தேசிய மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 225 பேரை தெரிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கச்சேரியடியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனுடன், 45 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் பிரதான பொறுப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இளைய தலைமுறைக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் 12வது தேசிய மாநாடு அமைக்கப்படவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது.