கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை

 


மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் எல்லைக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றிலிருந்து, இன்று (23) காலை வயதான பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திசைவீரசிங்கம் சதுக்கம் ஆறாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 71 வயதுடைய வினோதா ஜெகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை என அறியப்படுகிறது. வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் சில நேரம் வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது, அவரைக் காணாததால் வீட்டையும் சுற்றுவட்டாரத்தையும் தேடியுள்ளார். அப்போது வீட்டின் கிணற்றில் சடலம் இருப்பதை கவனித்து, அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும் சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை