இலங்கைப் புயலின்போது மாரடைப்பு: இரண்டு நாட்களுக்குப் பின் உயிர் பிழைத்த நபர்

 


இலங்கையைத் தாக்கிய திட்வா சூறாவளியின் விளைவாக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அவ்வாறு பாதிப்புகளைச் சந்தித்தவர்களில் சுரேஷ் குமாரும் ஒருவர். இவர் கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டைப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார்.

கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் நாள் சுரேஷ் குமாருக்கு திடீரென மார்பு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் தெல்தோட்டை மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறுகிறார். தெல்தோட்டைப் பகுதியோ அடிப்படை வசதிகள் குறைந்த ஒரு பிரதேசம். அங்குள்ள மருத்துவமனையும் மிகச் சிறியது.

தெல்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் குமாருக்கு இதய அடைப்பு (மாரடைப்பு) ஏற்பட்டது உறுதியானது. உடனடியாக அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டு, அங்கிருந்து அவரை ரிகில்லகஸ்கட்ட அல்லது பேராதனை மருத்துவமனைகள் ஒன்றிற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், திட்வா சூறாவளியின் தீவிர தாக்கம் காரணமாக, தெல்தோட்டைப் பகுதியிலிருந்து செல்லும் அனைத்து சாலைகளும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்தன.

சாலையில் மண்சரிவு, கனமழை, சாலைகளில் பிளவுகள், பல இடங்களில் சாலைகள் இடிந்து விழுந்த நிலை என, எந்த வகையிலும் தெல்தோட்டையிலிருந்து வெளியே செல்ல முடியாத ஒரு சூழல் நிலவியது.

மருத்துவமனையில் அவசர ஊர்திகள் இருந்தபோதிலும், மேலதிக சிகிச்சைக்காக அவரை வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப முடியாத இக்கட்டான நிலையை மருத்துவமனை நிர்வாகம் சந்தித்தது. இதையடுத்து, தனிப்பட்ட வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு, எப்படியாவது பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் தமக்கு அறிவுறுத்தியதாக சுரேஷ் குமார் தெரிவிக்கிறார். 

''தெல்தோட்டை மருத்துவமனையில் இ.சி.ஜி எல்லாம் எடுத்தார்கள். மருந்துகளைக் கொடுத்தார்கள். அடுத்த நாள் காலை 11 மணி போல மருத்துவர் ஒருவர் வந்தார். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார்," என்கிறார் சுரேஷ் குமார்.

தாங்கள் செய்ய வேண்டிய சிகிச்சைகளை செய்துமுடித்துவிட்டதாக கூறிய மருத்துவர், மேல்சிகிச்சைக்கான வசதிகள், மருந்துகள் அந்த மருத்துவமனையில் இல்லை எனக் கூறியுள்ளனர்.

"ஒன்று ரிகில்லகஸ்கட்ட போக வேண்டும், இல்லையென்றால், பேராதனை போக வேண்டும் என்று கூறிவிட்டார் மருத்துவர். முடிந்தவரை மருத்துவமனைக்கு சீக்கிரம் போங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டார். திரும்ப 12.30 அல்லது 1 மணி இருக்கும், செவிலியர் ஒருவர் வந்து, டிக்கெட் எழுதி கொடுத்துவிட்டு சாத்தியமான மருத்துவமனைக்கு சீக்கிரம் போங்கள் என்று சொன்னார்." என்கிறார் சுரேஷ் குமார்.

பின்னர் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, மருத்துவமனையிலிருந்து தெல்தோட்டை நகருக்கு அரை கிலோமீட்டர் வரை நடந்தே வந்ததாக கூறுகிறார் அவர்.

"மனைவி வரும் வரை காத்திருந்தேன். அவர் வரவில்லை. பிறகு ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எனது வீட்டுக்கு நடக்க தொடங்கினேன். இடையில் வரும் போது ஒரு ஆட்டோ கிடைத்தது. அதில் வந்து வீட்டில் இறங்கினேன்.'' என்று சுரேஷ் குமார் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, பேராதனை மருத்துவமனையை நோக்கி செல்ல சுரேஷ்குமார் தீர்மானித்துள்ளார்.    அருகிலிருக்கும் ஒருவரின் பைக்கை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்தோம், ஆனால் போக முடியவில்லை. சாலை எல்லாம் உடைந்து இருந்தது. ஐந்து மணி ஆகிவிட்டது. இருட்டாகிவிட்டது. திரும்பவும் வீட்டுக்கு வந்து விட்டேன். திரும்பியும் அடுத்த நாள் காலையில் 10 மணி போல மருத்துவமனைக்கு செல்ல தயாரானேன்." என்கிறார்.

நவம்பர் 30 அன்று அவர் தன் வீட்டிலிருந்து சுமார் 20-25 கி.மீ. தூரத்திலுள்ள கண்டி பேராதனை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

''அங்கு எல்லா பரிசோதனைகளையும் எடுத்துவிட்டு, மருத்துவர் என்னிடம், 'எவ்வளவு பயங்கரமான விஷயம், நீங்கள் இயல்பாக எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்' என்று சொல்லி திட்டினார்கள்.'' எனத் தெரிவித்தார் சுரேஷ் குமார்.

அதற்குப் பிறகு பரிசோதனைகளை செய்துவிட்டு 4 மணியளவில் தான் முதலாவது ஊசியை ஏற்றினார்கள். திரும்பவும் வந்து ஊசி ஏற்றினார்கள். அப்படியே சிகிச்சை நடந்தது.'' என அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

சுரேஷ்குமார் தற்போது குணமடைந்துள்ள போதிலும், அவருக்கு மாதம் தோறும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

தெல்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தனது நெஞ்சுவலி இல்லாது போனதாக தெரிவித்த அவர், தனக்கு குணமடைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடனேயே பொறுமையாக அடுத்த மருத்துவமனையை நோக்கி சென்றதாக குறிப்பிட்டார்.

''நான் செய்தது தவறு என்பதே நான் பின்னர் உணர்ந்துகொண்டேன். ஆனால் செய்வதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. மருத்துவர்கள் சொன்ன பின்னர் கொஞ்சம் பயமாகிவிட்டது. கொஞ்சம் தவறி இருந்தால் உயிரே போயிருக்குமே என்று தோன்றியது. எங்குமே போவதற்கு வழி இருக்கவில்லை. அதனால் தான் அப்படி செய்தேன்.'' என கூறினார்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுமாக இருந்தால் வீட்டில் இருந்து சிகிச்சை பெறக்கூடாது என்பதை புரிந்துகொண்டேன் என சுரேஷ்குமார் குறிப்பிட்டார்.   

இவ்வாறான சூழலில் என்ன செய்ய வேண்டும்?

எந்தவொரு வகையிலும் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படாத தருணத்தில், சுரேஷ்குமார் மாரடைப்புடன் நடந்து சென்றமை மற்றும் வீட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்தமை பாரதூரமான விடயம் என்று பலரும் கூறிவருகின்றார்கள்.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், கண்டி தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவரான சலாவூதீனிடம் வினவியது.  மாரடைப்பு என்பது உலகளவில் பார்ப்போமேயானால், அது உயிர்கொல்லி நோய்களில் முதலிடத்தைப் பிடிக்கும் ஒரு நோய் என மருத்துவமருத்துவர் சலாவூதீன் தெரிவிக்கின்றார்.

''நெஞ்சு வலி, அதிகமாக வியர்த்தல், மிகவும் சோர்வாக இருந்தாலோ, அருகிலுள்ள மருத்துவரிடம் சென்று இ.சி.ஜி எடுக்க வேண்டும். கூடிய சீக்கிரம் பெரியதொரு மருத்துவமனைக்கு வர வேண்டும். சிறிய மருத்துவமனைகளுக்கு சென்றால், ஆம்புலன்ஸ் வண்டிகளில் அவர்கள் அனுப்புவார்கள். நேரத்தை கழிக்கக்கூடாது." என்றார்.

முடிந்தளவு சிறிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அங்கே கொடுக்கப்படும் சில மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னர் உடனடியாக ஆக்சிஜனை செலுத்தி, பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள் என்கிறார் மருத்துவர் சலாவூதீன்.

"ஆம்புலன்ஸில் வருவதே சிறந்தது. மாரடைப்பு வந்தால் அல்லது நெஞ்சு வலி வந்தால் அவர்கள் நடக்கக்கூடாது. இருதயத்திற்கு வேலை கொடுக்கவே கூடாது. நாற்காலியிலேயே இருக்க வேண்டும். நாற்காலியிலேயே தூக்க வேண்டும். நடக்கவே கூடாது.' என அவர் குறிப்பிட்டார்.    அடைப்புகள் உருவாவதை தடுக்கும் மருந்துகளைக் கொடுப்போம். அல்லது அடைப்பு பெரிதாக இருந்தால் நாங்கள் கொடுக்கும் மருந்துகள் அதைத் தடுக்கும். முதலில் எப்படியாவது பெரிய மருத்துவமனைக்கு செல்லும் வழியை பார்க்க வேண்டும்." என்றார்.

நேரத்தைக் கடத்த கடத்த உயிருக்கு ஆபத்து என விளக்கிய மருத்துவர், இரண்டு நாட்கள் கழித்து வருபவர்கள் உயிர்பிழைப்பது கடினமாக உள்ளது என்றார்.

"இரண்டு நாட்கள் கழித்து வரும்போது ஏற்கெனவே இருதயத்தில் பாதிப்புகள் நடந்து முடிந்திருக்கும். அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையின் தரம் பழையதைப் போன்று இருக்காது. அவருக்கு எப்போதுமே வலி வந்துகொண்டே இருக்கும். அவருடைய இருதயம் பலவீனமாகவே இருக்கும். முந்தி இருந்த வலிமை இருக்காது." என விவரித்தார் மருத்துவர் சலாவூதீன்.

இதுவே பெரிய மருத்துவமனைக்கு விரைந்து சென்றால், இருதயம் சேதமடைவதை தடுத்துக்கொள்ள முடியும் என்றார். "அப்போது இருதயம் சேதமடையாது. அப்படியாக இருந்தால் சாதாரணமாக வாழ்க்கையை அவரால் வாழ முடியும். குறிப்பாக எவ்வளவு சீக்கரம் வசதியுள்ள மருத்துவமனைக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கரம் செல்ல வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.'' என சலாவூதீன் தெரிவித்தார்.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து, தாமே சிகிச்சைகளை அளித்துக்கொள்ளக்கூடாது என அவர் குறிப்பிடுகின்றார். உலகில் தற்போதைய சூழலில் ஏதோ சில காரணங்களினால் வயது வேறுபாடு இன்றி மாரடைப்பு ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  அதனால், எந்தவொரு வயதுடைய ஒரு நபருக்கும் நெஞ்சு வலி வருமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.


மாரடைப்பு என்று சந்தேகிக்கப்படும் பட்சத்தில், முதலுதவியாக என்ன செய்ய வேண்டும் என பிபிசி தமிழ், மருத்துவர் சலாவூதீனிடம் வினவியது.

'மாரடைப்புக்கு முதலுதவியை வீட்டில் செய்வது சாத்தியமில்லை. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். இயலுமானளவு விரைவாக கூட்டிக்கொண்டு போக வேண்டும். நடக்க விடவே வேண்டாம். நாற்காலியில் வைத்து அப்படியே தூக்கிக்கொண்டு போக வேண்டும். நடக்க நடக்க இருதயத்திற்கு வேலை அதிகம். நடக்கவிடாது, விரைவாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்." என்றார்.

உடனடியாக மூன்று விதமான மருந்துகள் தரப்பட வேண்டும் என அவர் கூறினார்.

"அந்த மருந்துகளை மருத்துவர்கள் உடனடியாக கொடுப்பார்கள். தேவைப்பட்டால் ஆக்சிஜன் கொடுப்பார்கள். அதற்குப் பிறகு சிறிய மருத்துவமனைகளினால் ஒன்றும் செய்ய முடியாது. உடனேயே இதய சிகிச்சை வழங்கும் வசதி உடைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுவே உயிரை காப்பாற்றும் முதலாவது வழிமுறை,'' என மருத்துவர் சலாவூதீன் தெரிவித்தார்.

புதியது பழையவை