வெனிசுவேலா கடலோரத்தில் எண்ணெய் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா


 வெனிசுவேலாவின் கடலோரப் பகுதியில் இருந்த ஓர் எண்ணெய் தாங்கிக் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நிக்கோலஸ் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

"நாங்கள் இப்பதான் வெனிசுவேலா கடலோரத்தில் ஒரு டேங்கர் கப்பலை பிடித்துள்ளோம். இது மிக மிகப் பெரிய டேங்கர், உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகவும் பிரமாண்டமானது," என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட கப்பலின் காணொளியை வெளியிட்ட அமெரிக்க சட்டமா அதிபர் (Attorney General), இந்தக் கப்பல், "வெனிசுவேலா மற்றும் ஈரானிலிருந்து தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெயை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு டேங்கர்" என்று விளக்கினார்.

இந்த நடவடிக்கையை வெனிசுவேலா உடனடியாகக் கண்டித்ததுடன், இதை "சர்வதேச கடல் கொள்ளை" என்றும் சாடியது. இதற்கு முன்னதாக, அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் "எண்ணெய் காலனி நாடாக" மாறாது என்று பிரகடனம் செய்திருந்தார்.

வெனிசுவேலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களைக் கடத்துவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது. அத்துடன், அதிபர் மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளை சமீப மாதங்களாக அது வேகப்படுத்தியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ள வெனிசுவேலா, அமெரிக்கா தனது வளங்களைத் திருட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கப்பல் கைப்பற்றப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, குறுகிய கால வழங்கல் தொடர்பான கவலைகளால் புதன்கிழமை அன்று பிரெண்ட் க்ரூட் எண்ணெய் விலை சற்று உயர்வு கண்டது.

இந்தச் செயல் கப்பல் நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புதியது பழையவை