பெண்ணின் புகைப்படத்தைத் தவறாகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்ட மாணவிக்கு நீதி மன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு



 கொழும்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாசமான படங்களாக மாற்றிய குற்றத்தை ஏற்றுக்கொண்ட இளம் பெண் ஒருவருக்கு கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று 50,000 ரூபாய் இழப்பீடு மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

குறிப்பிட்ட குற்றவாளி மீது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

அதன் விவரப்படி, ஃபேஸ்புக்கில் இருந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் படங்களை எடுத்துப் பயன்படுத்தியமை மற்றும் அந்தப் படங்களை மாற்றி இணையத்தில் பிரசுரித்த குற்றத்திற்காக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த முறைப்பாட்டின்பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (Computer Crimes Investigation Division) சந்தேகநபர் மீது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாம் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகநபரான அந்தப் பெண் கொழும்பில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் முன்னாள் மாணவி என்றும், தற்போது தனிப்பட்ட முறையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார் என்றும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

புதியது பழையவை