தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விவகாரம்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்

 


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களை இன்று புதன்கிழமை (31) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு, இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் உள்ள தையிட்டி காணி விவகாரத்திற்கு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அடைவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் எனத் தெரிவித்தார். அதன்படி, அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் விரிவாக விளக்கினார்.

இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் வரையறுக்கப்பட்ட எல்லைகளை தெளிவாக நிர்ணயித்து, அதனைத் தவிர்ந்த ஏனைய காணிகளை முதற்கட்டமாக விடுவிப்பதற்கான இணக்கப்பாட்டை ஏகமனதாக வெளிப்படுத்தினர்.

அதேவேளை, கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், விடுவிக்கக்கூடிய காணிகளின் சாத்தியங்கள் மற்றும் எல்லைகள் தொடர்பாக காணி உரிமையாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இந்த கலந்துரையாடல் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்றதாகவும், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை அரசாங்க அதிபர் முன்னெடுக்க காணி உரிமையாளர்கள் முழுமையான சம்மதத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை