மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மண்சரிவு ஆபத்து – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

 


மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பல பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சமீப காலமாக நிலவி வரும் சீரற்ற வானிலை நிலவரத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் நேரடி மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

அபாய தர மதிப்பீட்டு அறிக்கையின் படி, கண்டி மாவட்டத்தில் ஹசலக (Hasalaka) பகுதியைத் தவிர மற்ற பாடசாலைகள் பெரிதான அபாய நிலையில் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில பாடசாலை வளாகங்களை பொறியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உறுதிப்படுத்த முடியும் எனவும், அதற்கு இயலாத பாடசாலைகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களுக்கு மாற்றுத் தீர்வுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகள் தொடர்பான விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியாளர் ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி அமைச்சு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிக அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகள் குறித்து மேலதிக ஆய்வுகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகள் அனைத்தும் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை