தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள், ஊடக அமைச்சினால் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதால், அந்த நிபந்தனைகள் எப்போது மீறப்படுகின்றனவோ அப்போது சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரங்களைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு இருப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்களின் சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்தவும், நம்பகமான சுகாதாரத் தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களை பாராட்டும் நோக்கில், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌக்கிய அண்டஹெர – 2025” கௌரவிப்பு விழா இன்று (29) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், ஊடக ஒழுங்குமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிக அனுமதிகளாகவே வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
எனவே, ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும், அவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.