கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – கடும் சோதனையின் பின் பாதுகாப்பு உறுதி

 


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலையடுத்து, விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்பு சோதனைகளில் எவ்வித வெடிகுண்டும் இல்லை என விமான நிலைய முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்தார் தோஹாவிலிருந்து புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் QR-664 விமானம் இன்று காலை 08.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. போயிங் 787 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானத்தில் 245 பயணிகளும் 12 பணியாளர்களும் பயணித்தனர்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பே, அதில் வெடிபொருள் இருப்பதாகக் கூறி மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து, விமானம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தரையிறக்கப்பட்டு, நைகந்த பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டது.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், விமான நிலையத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கண்டறியும் விசேட பயிற்சி பெற்ற நாய்களின் உதவியுடன் முழு விமானமும் தீவிரமாக சோதனையிடப்பட்டது.

சோதனைகளில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படாததைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் பொது விமானப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்விமானம் இன்று காலை 10.15 மணிக்கு தோஹாவிற்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தாமதமடைந்து, இன்று மதியம் 01.07 மணிக்கு தோஹாவை நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை