டக்ளஸ் தேவானந்தாவின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – அரசாங்கத்திற்கு சுரேன் ராகவன் வலியுறுத்தல்

 


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிறைச்சாலைக்குள் உயிர் அபாயம் ஏற்படும் சூழ்நிலை காணப்படுவதாகவும், அவருக்கான உரிய பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசியலில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன், மகர சிறைச்சாலையில் ஆயிரம் கைதிகள் மட்டுமே வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், தற்போது மூவாயிரத்திற்கும் அதிகமான கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நெருக்கடியான சூழலில், டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல தடவைகள் அரசியல் எதிரிகளாலும் எதிர்க்கட்சிகளாலும் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவர் என்பதால், அவருக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம் என சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

புதியது பழையவை