நாட்டின் இலக்கமயமாக்கலுக்கு (Digitalization) உலக வங்கியின் நிதி உதவி

 


இலங்கையின் இலக்கமுறை மாற்றத்திற்கு (Digital Transformation) வலு சேர்க்கும் விதமாக, 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம், இலங்கையின் இலக்கமுறைத் துறையில் புதுமையையும் (Innovation) முதலீட்டையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இது அரசாங்கத்தின் சேவைகளைப் புதுப்பித்து, பொதுமக்களும் வணிகங்களும் அவற்றை எளிதாகவும், திறமையாகவும் அணுகுவதற்கு வழிவகுக்கும்.

இலங்கையின் இலக்கமயமாக்கல் முன்னெடுப்பின் மூலமாக, பொதுமக்கள் அனைத்து அரசாங்கச் சேவைகளையும் ஓரிடத்திலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது இணையதளம் உருவாக்கப்படும். மேலும், அரசு நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். அத்துடன், இலக்கமுறை ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள், மற்றும் தேவைக்கேற்ப விரிவுபடுத்தக்கூடிய நவீன தகவல் தளம் போன்ற வசதிகளும் உருவாகும்.

இந்த இலக்கமுறை உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு மேலதிகமாக, பொதுமக்களும் அரசுப் பணியாளர்களும் இந்த புதிய சேவைகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தத் தேவையான பயிற்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை