மத்திய மாகாணப் பாடசாலைகள் பாதுகாப்பாக உள்ளன: மண்சரிவு அபாயம் இல்லை என NBRO உறுதி

 

மத்திய மாகாணத்தில் உள்ள எந்தவொரு பாடசாலைக்கும் மண்சரிவு அபாயம் இல்லை என்பது, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட மதிப்பீட்டு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

'டிட்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவுத் தாக்கங்கள் காரணமாக, மத்திய மாகாணத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையையும் அங்கிருந்து அகற்றவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அவசியம் இல்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிறி கருணாவர்தன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வீதிகளில் சேதம்

பாடசாலைக் கட்டடங்கள் பாதுகாப்பாக உள்ள போதிலும், அந்தப் பாடசாலைகளுக்குச் செல்லும் வீதிகள் பல இடங்களில் குழி விழுந்தும் பலத்த சேதமடைந்தும் காணப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, மாணவர்களின் போக்குவரத்துப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அந்த வீதிகளை உடனடியாகப் புனரமைக்குமாறு அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு விபரங்கள்

இந்த விசேட மதிப்பீட்டு ஆய்வுக்காக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்களுடன் இணைந்து, பேராதனை, மொரட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 15 நிபுணர் குழுக்கள் பங்கேற்றன.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்த கள ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பாடசாலைகளை அந்த இடங்களிலேயே தொடர்ந்து நடத்துவது பொருத்தமானது என கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நிலவிய சீரற்ற வானிலையினால் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

புதியது பழையவை