கிழக்கு கரையை அண்மிக்கும் தாழமுக்கம்: 100 மி.மீ. வரை கனமழை, 60 கி.மீ. வேக காற்று – கடற்பரப்புக்கு செல்லத் தடை

 


இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க நிலை தற்போது பொத்துவிலில் இருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கக்கூடும் என இன்று (அதிகாலை 5.30 மணிக்கு) இற்றைப்படுத்தப்பட்ட வானிலை அறிவிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மொனராகலை, கொழும்பு மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50–60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளை பயன்படுத்த வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதனால் கடற்றொழிலாளர்கள், கடற்படையினர் மற்றும் கடற்பரப்பை பயன்படுத்துவோர் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

புதியது பழையவை