போக்குவரத்து சேவை சீர்கேடு – வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் அவதி

 


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக, அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரின் உத்தரவுகளையும், அப்பகுதி தேவைகளையும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில், போக்குவரத்து சேவை குறைபாடுகள் தொடர்பாக மக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்திருந்தனர். இதனையடுத்து, கஷ்ட மற்றும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு ஒழுங்கான பேருந்து சேவைகளை வழங்கவும், புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு உரிய பணிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்த பணிப்புகளை பொருட்படுத்தாத பருத்தித்துறை சாலை அதிகாரிகள், வருமானம் அதிகம் கிடைக்கும் 750 போன்ற வழித்தடங்களுக்கு மட்டுமே புதிய பேருந்துகளை ஒதுக்கி, சேவையில் ஈடுபடுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை – கெவில் பேருந்து சேவையின் இறுதி சேவை மாலை 6.15 மணிக்கு பருத்தித்துறை நகரிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில தினங்களில் அந்த சேவை இரவு 7.10 மணிக்கே ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நேர அட்டவணை ஒழுங்கீனங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன என மக்கள் கூறுகின்றனர்.

மேலும், அடிக்கடி பேருந்துகள் பழுதடைவதால், பயணிகள் பேருந்துகளைத் தள்ளிச் செல்லும் நிலைமை உருவாகி வருவதாகவும், இது பெரும் பாதுகாப்பு ஆபத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பருத்தித்துறை முதல் கெவில் வரை சேவையில் ஈடுபடும் சில பேருந்துகள் கட்டைக்காடு கிராமத்துடன் சேவையை நிறுத்துவதால், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, காலை நேரங்களில் பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி ஊடாக வவுனியா செல்லும் பேருந்து சேவையும், இரவு 8.00 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி ஊடாக கொழும்பு செல்லும் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் போக்குவரத்து சேவைகளும் உரிய முறையில் செயல்படுவதில்லை எனவும், குறிப்பாக பருத்தித்துறையிலிருந்து கெவில் செல்லும் தனியார் பேருந்து நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் இயக்கப்படுவதில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், நாக்கார்கோவில் – பருத்தித்துறை இடையிலான பேருந்து சேவையும் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பாக தனியார் போக்குவரத்து அதிகார சபைக்கு பலமுறை முறைப்பாடுகள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புதியது பழையவை