இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு – வத்தளை பிரதேச சபை தொழில்நுட்ப அதிகாரி கைது

 


வத்தளை பிரதேச சபையின் வெலிசறை உப செயலகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், இலஞ்சம் கோரியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அவற்றை பொருட்படுத்தாமல் தேவையான அனுமதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதற்காக ரூபாய் 50,000 இலஞ்சம் கோரியதாக, ராகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

புதியது பழையவை