இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வங்காள விரிகுடாவில், மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) மாலை மேலும் தீவிரமடையும் நிலையில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலம், பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் வடமேல் திசை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், அதேபோல் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில இடங்களில் இந்த காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இடியுடன் கூடிய மழை நேரங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைக்கும் வகையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
