கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட தவறு குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு பிரதமர் விளக்கம்

 


புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத் தொகுதியில் சர்ச்சைக்குரிய இணையதள முகவரி இடம்பெற்றமை பாரதூரமான தவறு என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு பின்நிற்காது எனவும் அவர் வலியுறுத்தினார். மல்பத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களை இன்று (08) சந்தித்து ஆசி பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டதுடன், குறித்த இணையதளத்திற்கான அணுகல் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பின்னர் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 01 முதல் 06 வரை விநியோகிக்கப்படவுள்ள 106 பாடநூல்கள் அடங்கிய தொகுதியை மகாநாயக்க தேரர்களிடம் பிரதமர் கையளித்தார்.

ஆங்கிலப் பாடத் தொகுதியில் ஏற்பட்ட குறைபாடு குறித்து விளக்கமளித்த பிரதமர், ஆரம்ப ஆய்வு அறிக்கையின்படி பாடநூல் பரிசோதனையின் எந்த நிலையிலும் அந்த இணையதள முகவரி கண்டறியப்படாதமை மிகக் கவலைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏனைய பாடநூல்களும் மீளாய்வு செய்யப்பட்ட போது எழுத்துப் பிழைகள் உள்ளிட்ட மேலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், தேசிய கல்வி நிறுவனத்திடம் இருந்த பாடநூல் தயாரிப்பு மற்றும் அச்சிடல் பொறுப்பை மீண்டும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

சுமார் 5,000 ஆசிரியர்களுக்கு இந்தப் பாடநூல்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தவறு எவரது கவனத்திற்கும் எட்டாதது பெரும் குறைபாடாகும் என குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் பாடசாலைப் பாடநூல்களில் இணையதளங்களுக்கான நேரடி இணைப்புகள் (Links) சேர்க்கப்பட மாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கல்வித் துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டின்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கை வரைபுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

புதியது பழையவை