187 பேருடன் பறந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக கட்டுநாயக்கவில் மீள் தரையிறக்கம்

 


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கி பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-229 இலக்க விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று (2026 ஜனவரி 8) மாலை 6.44 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2 மணி 21 நிமிடங்கள் பறந்த பின்னர் திரும்ப அழைக்கப்பட்டது.

விமானம் பறந்துகொண்டிருந்த வேளையில் அதன் ஹைட்ரோலிக் அமைப்பில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதை விமானி கண்டறிந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, விமானத்தை பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, விமானி இரவு 9.05 மணியளவில் விமானத்தை கட்டுநாயக்கவில் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கியுள்ளார்.

இந்த விமானத்தில் 179 பயணிகளும், 8 பணியாளர்களும் என மொத்தம் 187 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகள், மாற்று விமான சேவைகள் மூலம் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

புதியது பழையவை