கனடாவில் நிகழ்ந்த வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு

 


கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 35 வயதுடைய அந்தப் பெண், வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விபத்து, கனடாவின் எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்றதாகவும், அங்கு ஒரு லொறி மோதியதன் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு பின்னர், இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை சந்திப்புப் பகுதிக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, இஸ்லிங்டன் அவென்யூ வழியாக தெற்கே பயணித்த வாகனம் ஒன்று, டிக்சன் சாலையில் மேற்கு நோக்கி வலது புறமாக திரும்ப முயன்ற போது, வீதியை கடக்க முயன்றிருந்த பெண் மீது லொறி மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே மருத்துவ உதவி வழங்கப்பட்ட போதிலும், அந்தப் பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னர், லொறியின் சாரதி சம்பவ இடத்தை விட்டு விலகாமல் அங்கேயே இருந்ததாகவும், விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை