வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபருக்கு, 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். எம். எம். மிஹால், திறந்த நீதிமன்றில் நேற்று (09.01) தீர்ப்பை அறிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக, அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி, குறித்த சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை முன்னெடுத்த நிலையில், விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை, ரூ. 10,000 அபராதம் அபராதம் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சாதாரண சிறை), பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 இலட்சம் இழப்பீடு (இழப்பீடு செலுத்தத் தவறின் 1 ஆண்டு சிறை என தண்டனைகள் விதித்துள்ளது.
