கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் ஆடு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் வீதிகளிலும் மனித நடமாட்டம் குறைவான இடங்களிலும் இருந்த ஆடுகளை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்று, இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதன் உண்மைப் பெறுமதிக்கு அரைவாசி விலையில் விற்பனை செய்துவந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆடு உரிமையாளர்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (08) இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் திருடப்பட்ட ஐந்து ஆடுகள் உரிய உரிமையாளர்களால் இனங்காணப்பட்டதுடன், அவை தர்மபுரம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
