பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறிவைத்து, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி கடுமையாகக் கண்டிப்பதாக, அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினரிடமிருந்து மட்டுமன்றி, அரசாங்கத்திற்குள்ளேயும் சிலரால் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து பிரதமர் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற கடைகள், அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் வேதனத்தையும் உறுதிப்படுத்தும்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய சாணக்கியன் எம்பி, கல்வி மறுசீரமைப்பு தொடர்பான அரசின் வேலைத்திட்டங்களில் பல்வேறு விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக கூறினார். குறிப்பாக வரலாறு தொடர்பான சில உள்ளடக்கங்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில், பிரதமரை பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவரது தனிப்பட்ட விவகாரங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும் சேறுபூசல்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறிய சாணக்கியன், பெண் அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் குறிவைக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் வலியுறுத்தினார்.