பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பை விட சிறந்த வாழ்க்கைத் தரம்– ஜனாதிபதி உறுதி

 


அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவுகளையும் வழங்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே அரசின் முக்கிய இலக்கு என்றும், அதற்கான வலுவான வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களை 2048 வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

டிட்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை இழந்த குருநாகல் மாவட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று (09) பிற்பகல் கொபேகனே – விதிகுலிய பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

‘Rebuilding Sri Lanka’ எனும் தேசிய மீட்பு முயற்சியின் பிரதான வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் PROJECT 5M திட்டத்தின் கீழ், நிக்கவெரட்டிய, கொபேகனே, ரஸ்நாயக்கபுர, கொட்டவெஹெர, பன்னல, பிங்கிரிய, மஹவ மற்றும் வாரியபொல பிரதேசங்களில் அனர்த்தத்தால் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக அதே இடங்களில் புதிய வீடுகள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வீடுகள் கட்டுதல் மற்றும் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பேரழிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என சிலர் எதிர்பார்த்த போதிலும், அரசின் துரித நடவடிக்கைகள் மூலம் நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் கணிசமான அளவில் மீட்டெடுக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தப் பணிகளில் தைரியமாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட வலுவான பொருளாதாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

— ஜனாதிபதி ஊடகப் பிரிவு

புதியது பழையவை