இந்தியாவின் குஜராத் மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்திற்குள் 12 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து அச்ச நிலையில் உள்ளனர்.
குஜராத்தின் சவுராஷ்டிரா மண்டலத்தில், நேற்றிரவு முதல் இன்று (ஜனவரி 09) நண்பகல் வரை தொடர்ச்சியாக நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதன் காரணமாக ராஜ்காட் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இரவு முழுவதும் உறங்க முடியாமல் தவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திறந்த வெளிகளில் தஞ்சமடைந்த மக்கள்
தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் அச்சமடைந்த பெரும்பாலானோர், வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக உப்லேட்டா, தோராஜி மற்றும் ஜேட்புர் தாலுகாக்களில், மொத்தமாக 21 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 1.4 முதல் 3.8 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உப்லேட்டா பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 2.6 முதல் அதிகபட்சமாக 3.8 வரை 12 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலாவது நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இதுவரை எந்தவித உயிரிழப்புகளோ அல்லது பொருள் சேதங்களோ பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
