இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஹரி புரூக்கிற்கு £30,000 அபராதம்

 


ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) தொடர்பான களத்திற்கு வெளியான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி, வெலிங்டனில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதிக்குச் சென்ற புரூக், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாகக் கூறி அங்குள்ள பாதுகாப்பு பணியாளர்கள் (பவுன்சர்கள்) அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் புரூக் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் அவர் உடனடியாக அணியின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரித்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, புரூக்கின் நடத்தை அணியின் ஒழுக்கத்திற்கும் நாட்டின் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதி, அவருக்கு அதிகபட்ச அபராதத் தொகையான 30,000 பவுண்ட் விதித்துள்ளது.

இருப்பினும், ஹரி புரூக் இங்கிலாந்து அணியின் தலைவர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளதுடன்,

என் செயல் இங்கிலாந்து அணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பொறுப்புடன் நடப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 4–1 என்ற கணக்கில் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், வீரர்களின் களத்திற்கு வெளியான செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. தொடரின் போது இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து மது அருந்தியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஆஷஸ் தொடர் முடிந்து நாடு திரும்பும் ஹரி புரூக், வரும் ஜனவரி 19ஆம் திகதி இலங்கையுடனான தொடருக்கான ஆயத்தங்களை ஆரம்பிக்கவுள்ளார். பெப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம், தலைவர் பதவியில் அவர் எதிர்கொள்ளும் முதல் பெரிய தொடராக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை