சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4–1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.
இதற்கு முன், போட்டியின் கடைசி நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஜேக்கப் பெத்தெல் 154 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் மிச்செல் ஸ்டாக் மற்றும் போ வெப்ஸ்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
வெற்றி இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணியில் மானுஸ் லபுஷேன், ஜேக் வெதரோல்ட் ஆகியோர் 30க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன், அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
இந்தப் போட்டி வெற்றியுடன், அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தனது 39ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்றார். 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 16 சதங்கள் மற்றும் 28 அரைச் சதங்களுடன் மொத்தமாக 6229 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக ட்ரவிஸ் ஹெட் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக மிச்செல் ஸ்டாக் அறிவிக்கப்பட்டார்.