புகைபிடிப்பால் இலங்கையில் தினமும் 50 பேர் அகால மரணம் – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ADIC

 


இலங்கையில் புகைபிடிப்பு காரணமாக தினமும் சுமார் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது சுமார் 15 இலட்சம் பெரியவர்கள் புகைபிடிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் ADIC குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் புகையிலை கட்டுப்பாட்டு முயற்சிகளில் புகையிலைத் துறையின் தலையீடுகள் – சர்வதேசமும் இலங்கையும் என்ற தலைப்பில், இன்று புதன்கிழமை (7) கொழும்பு மரியட் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
வைத்தியர் எரந்திக்க பத்திராஜா, வைத்தியர் பாலித்த தென்னக்கோன், வைத்தியர் ஆர். எப். ராஜேந்திரா உள்ளிட்டோர் மற்றும் ADIC பணிப்பாளர் உரையாற்றினர்.

அவர்கள் தெரிவித்ததாவது,
நீண்ட காலமாக புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், புகையிலைப் பாவனை இன்னும் பொது சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக தொடர்கிறது.

இலங்கையில் ஏற்படும் 83% மரணங்கள் தொற்றா நோய்களினால் நிகழ்கின்றன.
புகையிலைப் பாவனை, இந்த தொற்றா நோய்களுக்கு காரணமாகும் நான்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

மேலும்,
இலங்கையர்கள் தினமும் சுமார் ரூபா 520 மில்லியன் தொகையை சிகரெட் புகைப்பதற்காக செலவிடுகின்றனர்.
ஒவ்வொரு நிமிடத்திலும் 10 பேர் மரணமடைவது, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வாடிக்கையாளர்கள் குறைந்து வரும் நிலையில்,
புகையிலை நிறுவனங்கள் “சமூக பொறுப்பு” மற்றும் “பசுமை” என்ற பெயர்களில் தங்களை நியாயப்படுத்த முயற்சி செய்து, பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

🔹 முக்கிய பரிந்துரைகள்

  • புகையிலைப் பொருட்களுக்கு அறிவியல் அடிப்படையிலான வரிக் கொள்கை

  • தனி சிகரெட் விற்பனையைத் தடை செய்தல்

  • கல்வி மற்றும் சமய தலங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் விற்பனை தடை

  • NATA சட்ட மீறல்களை குற்றமாக அறிவித்தல்

  • NATA சட்ட மீறல்களுக்கான தண்டம் தொகையை அதிகரித்தல்

  • புகையிலை பயிர்ச்செய்கையை விட்டு மாற்றுப் பயிர்களுக்கு விவசாயிகளை ஊக்குவித்தல்

  • வெற்றுப் பொதியிடல் (Plain Packaging) முறையை அமுல்படுத்தல்

வணிக நலன்களை விட பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி,
புகையிலை கட்டுப்பாட்டு கொள்கைகளை தாமதமின்றி உருவாக்கி, திறம்பட அமுல்படுத்த வேண்டும் என ADIC வலியுறுத்தியுள்ளது.

புதியது பழையவை