6ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளம் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் மூன்று அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய வலைத்தளத்தை பாடத்திட்டத் தொகுதியில் இணைத்த செயல்முறையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு அதிகாரியும், நேற்று (05.01) விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம் தேசிய கல்வி நிறுவகத்துக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கை அமைச்சுக்கு கையளிப்பு
இதற்கிடையில், 6ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் குறித்த வலைத்தளம் சேர்க்கப்பட்டதற்கான பொறுப்பு யாருக்கு என்பதைக் குறிப்பிட்ட விரிவான அறிக்கை, தேசிய கல்வி நிறுவகத்தால் நேற்று (05) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, தேசிய கல்வி நிறுவகத்தின் மூன்று பேர் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர் அறிக்கையை வழங்குமாறு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரண அவர்களால் இந்த மூவர் குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பணிப்பாளர் நாயக பதவியில் மாற்றம்
மேலும், அந்த அறிக்கையில்,
-
சர்ச்சைக்குரிய வலைத்தளம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நடைமுறை
-
அதில் தொடர்புடைய அதிகாரிகள்
-
மேற்கொள்ளப்பட்ட உள் நடவடிக்கைகள்
பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயக பதவியின் கடமைகளை தற்காலிகமாக நிறைவேற்ற, உயர்கல்வி அமைச்சகத்தின் மேலதிக செயலாளர் சந்திமா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.