ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம், ஜப்பான் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 10.18 மணியளவில் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு தீவிர அளவுகோலின் படி, இது 5ஆம் நிலை தீவிரம் கொண்ட நிலநடுக்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதனைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து, யசுகி பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அறிவித்துள்ளது.
எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
