இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை மேலும் தீவிரமடைந்து, தற்போது ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளை மறுதினம் முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கூறிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக, ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், மேலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் பலத்த காற்று அடிக்கடி வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய நிலையில், பொது மக்கள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசத்தின் காரணமாக, கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் பணியாளர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் எதிர்கால வானிலை அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை, பொத்துவில் வழியாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள மற்ற கடல் பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது.
கடல் பகுதிகளில், வடகிழக்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருவளை முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் வழியாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீட்டர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்நேரங்களில் குறித்த கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
மேலும், காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதியில், கடல் அலை உயரம் சுமார் 2.5 முதல் 3.0 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். எனினும், இது கரையோரப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.