வெனிசுலா விவகாரம்: அமெரிக்க நடவடிக்கைக்கு ஐ.நா. கடும் கண்டனம்

 


வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்தமை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் தீவிர கவலை வெளியிடப்பட்டதுடன், அந்த நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விவாதிக்க, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு கொலம்பியா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பாதுகாப்புக் கவுன்சிலின் விசேட அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் சீனா, கொலம்பியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்ததுடன், கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தின.

இந்தக் கூட்டத்தில், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸின் உரையை துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகாப்லோ வாசித்தார். அவர் உரையில், நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய அடிப்படைக் கொள்கைகள் மதிக்கப்பட வேண்டியவை என வலியுறுத்தினார்.

மேலும், வெனிசுலாவின் உள்நாட்டு நிலைத்தன்மை மற்றும் இந்த நடவடிக்கைகள் பிராந்திய ரீதியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும், நாடுகளுக்கிடையிலான உறவுகளை கையாளும் விதம் எதிர்காலத்திற்கு ஆபத்தான முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிட்டு ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.

இதற்கிடையில், கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய அமெரிக்காவின் தூதர் மைக் வால்ட்ஸ், அமெரிக்க நீதித்துறையால் குற்றச்சாட்டுகளுக்குட்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் இரண்டு நபர்களான நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, துல்லியமான சட்ட அமுலாக்கல் நடவடிக்கையாகும் என விளக்கினார்.

அமெரிக்கா வெனிசுலா நாட்டிற்கோ அல்லது அதன் மக்களுக்கோ எதிராக போரை முன்னெடுக்கவில்லை என்றும், அந்த நாட்டை கைப்பற்றும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை