வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேலும் தீவிரமடையும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன் தாக்கம் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மாகாணம் உட்பட நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டரை விட அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கேசந்துறை முதல் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில், கடல் அலைகள் 2.5 முதல் 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழைப்பொழிவு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்களின்படி, மகாவலி ஆற்றின் மநம்பிட்டி பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து தற்போது ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டியுள்ளது. இதனால், மநம்பிட்டி மற்றும் கல்லல்லே போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அந்தப் பாதைகளைப் பயன்படுத்துவோர் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட ரீதியாக அனைத்து அரச அதிகாரிகளும் முழு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனர்த்தம் தொடர்பான அவசர உதவிகள் அல்லது தகவல்களைப் பெற 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை எந்நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.