மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவதால், கடல் பகுதி பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. தொடர்ந்து நிலவும் இந்த கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், இதனால் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனர்த்த நிலைமை நிலவுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால், தமது தினசரி ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எந்தவித மாற்று வழிகளும் இல்லாமல், மீனவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
மாவட்டத்தில் மீண்டும் பாரிய அளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூனொச்சிமுனை உள்ளிட்ட பல கரையோரப் பிரதேசங்களில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், கரையோர பகுதிகளில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளதால், மீன்களின் விநியோகத்திலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.