வங்கதேசத்தில் கும்பல் துரத்தியதில் துயர முடிவு : கால்வாயில் குதித்து ஹிந்து இளைஞர் உயிரிழப்பு

 


டாக்கா: வங்கதேசத்தில் தன்னை துரத்தி வந்த வன்முறை கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர், கால்வாயில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதற்குப் பின்னர், வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வன்முறைச் சம்பவங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 2 முதல் 35 நாட்களுக்குள், வங்கதேசம் முழுவதும் 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவங்களுக்கான காரணங்கள் வெவ்வேறு விதமாக கூறப்பட்டாலும், உயிரிழந்த அனைவரும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நவோகான் மாவட்டத்தின் மகாதேப்பூர் பகுதியில் மீண்டும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மிதுன் என்ற 25 வயது ஹிந்து இளைஞர், தன்னை துரத்திய கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கால்வாயில் குதித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்ட காவல்துறையினர், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை