மண்சரிவு அபாயம் தீவிரம் – கண்டி, நுவரெலியா பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை; மக்கள் இடம்பெயரத் தயாராக அறிவுறுத்தல்

 


நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உயர் அபாய நிலை (Red Alert) அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரங்களை ஆய்வு செய்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

இதனுடன், மண்சரிவு எச்சரிக்கை இரண்டாம் கட்டத்தின் கீழ்,மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை தொடர்வதால், மண்ணில் விரிசல்கள், சுவர் சாய்வு, மரங்கள் சாய்தல், நீரூற்றுகள் உருவாகுதல் போன்ற மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படக்கூடும் எனவும், அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டவுடன் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர,

மக்கள் இடம்பெயர வேண்டிய அவசர நிலை ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக, ‘அனர்த்த அவசரப் பை’ ஒன்றை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அந்தப் பையில் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள், பிள்ளைகளின் கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்கள், மேலும் கொண்டு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கியிருக்க வேண்டும். இது உயிர் பாதுகாப்பிற்கும் பின்னர் மீளச் சீரமைப்பிற்கும் மிக முக்கியமானதாகும்” என அவர் தெரிவித்தார்.

புதியது பழையவை