குற்றவியல் கும்பல்களிடமிருந்து அதிகாரத்தை மீட்டெடுப்போம் – அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதி

 


வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா தங்களது நாட்டுக்கு அழைத்துச் சென்ற பின்னணியில், குற்றவியல் கும்பல்களிடமிருந்து அதிகாரத்தை பறித்து சட்டப்பூர்வ அரசாங்கங்களுக்கு ஒப்படைப்பதே அமெரிக்காவின் நோக்கம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முக்கிய வழி, அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயார் என்பதை உலகிற்கு தெளிவுபடுத்துவதுதான். இதன் மூலம் அமெரிக்கா மதிக்கப்படும். குற்றவியல் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை மீட்டெடுத்து, அதை சட்டபூர்வ அரசாங்கங்களுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. அமைதி என்பது அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும், சட்டப்பூர்வ ஆட்சிகளை வலுப்படுத்துவதிலும்தான் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, வெனிசுலா தலைநகர் கராகசில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்படும் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்படும். மெக்ஸிகோவை போதைப்பொருள் கும்பல்களே ஆள்கின்றன” எனக் கூறியிருந்தார். ட்ரம்பின் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஜே.டி. வான்ஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை ட்ரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இது தொடர்பான விசாரணையை நியூயார்க் நீதிமன்றம் முன்னெடுத்து வருகிறது.

இந்த கைது நடவடிக்கை வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டது என, அமெரிக்க ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களையும் அந்த நாட்டின் நிர்வாகத்தையும் அமெரிக்கா தற்காலிகமாக கையாளும் என டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். மேலும், வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் இந்த ராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் திட்டவட்டமாக எதிர்க்கிறோம்” என மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை