கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வியாழக்கிழமை (08) மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த இந்த விமானம், வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது அதன் ஹைட்ரோலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி அவதானித்துள்ளார்.
உடனடியாக விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வானில் பறந்த பின்னர், குறித்த விமானம் இரவு 9.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
அந்த நேரத்தில் விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவு தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலம் குவைத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
