சபை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் – எம்.பி. அர்ச்சுனா இராமநாதனுக்கு பிரதி அமைச்சர் அறிவுரை

 


பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் ஒழுங்கின்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகக் குறிப்பிட்டு, பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும், வேதனத்தையும் ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் திட்டமிட்ட வகையில் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் சில அரசியல் தரப்பினர் பிரதமர் மீது மிகவும் தரமற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, சைகைகளும் வார்த்தைகளும் பயன்படுத்தி பிரதமரை கீழ்த்தரமான முறையில் விமர்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஏற்றுக்கொள்வார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், எதிர்க்கட்சியின் பெண் உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன மற்றும் சந்திராணி கிரியெல்ல ஆகியோர் இத்தகைய தரமற்ற அரசியல் நடத்தைகளை ஏற்றுக்கொள்வார்களா எனவும் அவர் வினவினார்.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காலை முதல் சபையில் கூச்சலிட்டு ஏனைய உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மரியாதையுடனும் பொறுப்புடனும் செயற்படுவதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வடக்கு மாகாணத்தின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து அர்ச்சுனா இராமநாதன் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நிலையியல் கட்டளை புத்தகம் மட்டுமே பாராளுமன்ற செயல்பாடுகளின் முழுமையல்ல; கூச்சலிடுவதும் சிற்றுண்டிச்சாலையில் சென்று உண்பதும் பாராளுமன்ற உறுப்பினரின் கடமை அல்ல என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

புதியது பழையவை