வெனிசுவேலாவின் புதிய எண்ணெய் ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படும் வருமானம் முழுவதும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பின்னர், அந்த நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார திசையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பொருளாதார ஒப்பந்தத்தின் கீழ் வெனிசுவேலா அமெரிக்க தயாரிப்புகளுக்கு முதன்மை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி அமெரிக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யப்படும் உணவுப் பொருட்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட உயர்தர மருந்துகள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள்,
மேலும், அமெரிக்காவை தனது பிரதான வர்த்தகக் கூட்டாளியாக வெனிசுவேலா அங்கீகரித்தல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் அந்த இடைக்கால அரசாங்கத்துடன் நெருங்கிய உறவை பேணிவருகிறது.
மேலும், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்பினால், சீனா, ரஷ்யா மற்றும் கியூபா போன்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வெனிசுவேலா முற்றாகக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையையும் ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்திருந்தது.
இந்த பின்னணியிலேயே, அமெரிக்க தயாரிப்புகளை மட்டுமே கொள்வனவு செய்யும் இந்த முடிவு “புத்திசாலித்தனமானதும், எதிர்காலத்தை நோக்கியதுமான தீர்மானம்” என ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலீன் லீவிட் கருத்து தெரிவிக்கையில்,
வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகளுடன் அமெரிக்கா மிக நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய தீர்மானங்கள் அமெரிக்காவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
