சட்ட திருத்தங்களுடன் பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சட்டப் பேராசிரியர் சர்வேஸ்வரன்

 


அவசியமான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஒரு கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களால் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் மூலம் மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என அவர் விளக்கினார்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால், மாகாண சபைகள் தற்போது ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், இது அரசியலமைப்புக்கு முரணான நிலை எனவும் பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

எல்லை நிர்ணயப் பிரச்சினைகளை காரணமாகக் கொண்டு தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டுமெனில் எல்லை நிர்ணயம் அவசியமானதாகும். எனினும், பல இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் எல்லைகளை நிர்ணயம் செய்வது கடினமான செயற்பாடாக இருப்பதால், உடனடியாக அந்த முறையில் தேர்தலை நடத்துவது நடைமுறைசார்ந்ததாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதிய தேர்தல் முறையைத் தவிர்த்து, பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புதியது பழையவை