இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி, 2026 ஜனவரி 06ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மரியாதையுடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடையிலான சந்திப்பு பல்லூடக மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய மானியத்தின் கீழ் இராணுவப் போர் கல்லூரியில் அமைக்கப்படும் இந்திய–இலங்கை விளையாட்டு வளாகத்திற்கான பரிமாற்றக் கடிதங்களில் கையெழுத்திடப்பட்டதுடன், சந்திப்பு நிறைவடைந்தது.
பின்னர், அனர்த்த நிவாரணக் குழுக்களின் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புள்ள சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் ஜெனரல் திவேதி கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய–இலங்கை இராணுவங்களுக்கிடையிலான வலுவான பரஸ்பர உறவை பிரதிபலிக்கும் வகையில், 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 2 அம்பியூலன்ஸ்கள் இலங்கை இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. தொலகே, மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத், மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்திற்கு முன்னதாக, ஜெனரல் திவேதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு விஜயம் செய்து, அங்கு பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், அந்தக் கல்லூரி நூலகத்தில் இந்திய–இலங்கை மூலையை திறந்து வைத்ததுடன், அம்பியூலன்ஸையும் வழங்கினார்.
அத்துடன், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து, இந்திய வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.